29/09/2019
பெரியாரின்றி அமையாது உலகு !?
------------------------------------------------------------------
அன்பு சகோதரர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்களுக்கு.
இப்படி ஒரு விவாதத்தோடு சந்தித்துக்கொள்வோம் என எதிர்பார்க்கவில்லை. துரியோதணன் கூடாரத்தில் கர்ணனாகி நிற்கின்றீர்கள்.
சமீபத்தில் தாங்கள் அமெரிக்காவில் பேசிய, ‘தமிழ்த் தேசியமும்- தந்தை பெரியாரும்’ நிகழ்ச்சியின் உரையை வாசித்து அதிர்ச்சிக்குள்ளானேன்.
காரணம், ‘கேழ்வரகில் நெய் வடிகிறது’ என்ற ரகத்திற்காக அல்ல. எதையும் தெளிவுடன் பேசும் தாங்கள், இதில் நிறைய இடறியிருக்கின்றீர்கள் என்பதுதான். முதலில் தமிழ்த்தேசியம்- திராவிடம் என்ற இரண்டுக்குமான தெளிவான ‘இடங்களை’ விளக்கியிருக்க வேண்டும்.
“தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கிற சொல்லுக்குள் இருக்கின்றது. தமிழ்த் தேசியம் என்கிற வார்த்தை தந்தை பெரியார் என்கிற வார்த்தைக்குள் இருக்கின்றது. அவருடைய வாழ்க்கைக்குள் இருக்கின்றது”- என்கிறீர்கள்.
தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்.-என்கிறீர்கள்
பெரியார் ஏற்றுக்கொண்ட இரண்டே இரண்டு அறிவாளிகள் திருவள்ளுவரும், ஔவையாரும்தான்- என்கிறீர்கள்
சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும் என்றார் பெரியார்-என்கிறீர்கள்
தமிழ்மொழி காக்க, இந்தியை 1948-லேயே எதிர்த்தவர் பெரியார் என்கிறீர்கள்..
இங்குள்ள சிலரும் அப்படித்தான், ‘பெரியார் 1938-ல் இருந்தே இந்தியை எதிர்த்து தமிழ் காத்து நின்றார் என்கிறார்கள்.
ஆனால் அந்த மனிதரோ .“எனது இந்தி எதிர்ப்பு என்பது, இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்...
ஆகையால் தமிழர் தோழர்களே! உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன், வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப் பழகுங்கள்” (27.1.1969-ல் விடுதலை அறிக்கை) என்று கூறியிருக்கிறார்.
‘தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல’ என்றும் ‘ஆங்கிலம் தமிழ் நாட்டு மொழியாக ஆகவேண்டும் என்பதற்காகதான்’ என்றும் தெளிவாக கூறியிருக்கின்றார். இந்த பெரியாருக்குள்தான் தமிழ்த் தேசியம் இருக்கின்றதா நண்பரே.?
அடுத்து, மொழிவழி மாநிலம் கோரிக்கையையும் பெரியார்தான் நகர்த்தினார், தூக்கி சுமந்தார் விஷயத்திற்கு வருவோம்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போதே, ‘இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கி விடுகின்றேன்- ஜெர்மன் இட்லரை வீழ்த்த ஆதரவுத் தாருங்கள்’ என்று 1945-லேயே பிரிட்டிஷ் அரசு வெளிப்படையாக அறிக்கை விட்டது. அந்த நேரத்தில்தான் காங்கிரஸ் கட்சியும், ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை முடுக்கியிருந்தது. அது, சரியான நேரமும்கூட.
அந்த நேரத்திலேயே, ‘மொழிவாரி மாநிலம்’ கோரிக்கை வலுப்பெற தொடங்கி விட்டது. ம.பொ.சி. உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் ‘புதிய தமிழகம்’ என்ற கோரிக்கையை எழுப்பியிருந்தார்கள். அதே போன்று ஐக்கிய கேரளம், கன்னடம், தனி ஆந்திரா, மகாராஷ்டிரா, என்று அந்தந்த மொழி பேசும் மக்கள் தலைவர்களும் கோரிக்கை வைத்துக் போர்க்கொடி தூக்கியிருந்தார்கள்.
அப்படியான நேரத்தில் இங்கே தலைவராக! இருந்த பெரியார் என்ன செய்தார் என்றால்...
“தமிழ் நாட்டை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது தமிழ் அரசு, தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம், நம்முடைய சக்தியை குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்” என்று (11.1.1947 ) தனது விடுதலை ஏட்டில் அறிக்கை விடுக்கிறார்.
அது மட்டுமல்ல, “சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும் என்றார் பெரியார்-என்கிறீர்களே, அந்த மனிதர்தான்.
“மொழிவழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக்காட்டி உள்ளோம். மீண்டும் கூறுகின்றோம். மொழிவழி மாகாண கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டாம்” (21.4.1947-விடுதலை) என்று கூறுகிறார். என்னே அவரின் தமிழ் மொழிப் பற்று?
மற்ற மாநில தலைவர்கள் எல்லாம், எங்கள் மொழியில் தனி மாநிலம் வேண்டும் என போராடி கேட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் இந்த பெரியார், ‘அப்படி எல்லாம் வேண்டாம்-கேட்காதீர்கள்’ என்கிறார்! இந்த பெரியாருக்குள்தான் தமிழ்த் தேசியம் இருக்கின்றது என்கிறீர்கள்?!
அதோடு நிற்கவில்லை...
பிரதமர் நேரு, விறுவிறுவென்று மொழிவாரி மாநில வேலையில் இறங்கினார். 1953-ல் ஆந்திர மாநிலம் தனியாக பிரிய இருக்கின்ற போது...
“மொழிவாரி என்பதை பற்றி சில சொல்கிறேன். மொழி மீது ஒரு நாடு எதற்காக பிரியவேண்டும்? ஜாதியின் மீது, மதத்தின் மீது, இனத்தின் மீது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு” என்று அறிக்கை விடுகின்றார். சாதியின்மீது, இனத்தின் மீது தனி மாநிலம் இருக்கலாமாம். ஆனால் மொழியின் மீது மாநிலம் கூடாதாம். இந்த பெரியாருக்குள்தான் தமிழ்த் தேசியம் இருக்கிறது என்கிறீர்!
ஆனாலும், இந்த மனிதர் எப்போது மொழிவாரி மாநிலத்தை ஆதரித்தார் தெரியுமா?
இவரின் சலசலப்பு அறிக்கைகளை எல்லாம் பிரதமர் நேரு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. மொழிவாரி மாநிலம் பிரிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்திருந்தார். காரணம் காங்கிரஸ் கட்சி 1920-லேயே ‘மொழிவாரி மாநிலத்தை’ தீவிரமாக ஆதரித்தது. சென்னை ராஜதானியாக இருந்தபோதே, ‘தமிழ்நாடு காங்.கமிட்டி, ’ஆந்திரபிரதேச காங்.கமிட்டி’ என அறிவித்து, பெயர் வைத்துவிட்டிருந்து அக்கட்சி.
அப்படிப்பட்ட நோக்கமுள்ள பிரதமர் நேரு, 1956-ல் ‘மொழிவாரி மாநிலம்’ என்று பிரித்து- அறிவித்துவிட்டார். அப்போதுதான் பெரியார் வேறு வழியின்றி, ஒரு பெரிய குட்டிக்கரணம் அடித்து, எல்லோருக்குமாக முந்திக்கொண்டு, “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கத்தை “மீண்டும்” எழுப்பி தன்னுடைய நாளேட்டில் முத்திரை பதிக்கின்றார். இதுதான் பெரியார். (பேசியாகனுமில்லயா- பசிக்குமில்லையா)
இந்த இடத்தில் ஏன் ”மீண்டும்” என்ற வார்த்தையை சொன்னேன்? என்ற சந்தேகம் வருகிறதா? வரவேண்டும்.!
கொஞ்சம் பின்னால், 1937-ல் போய் நிற்போம். சென்னை மாகாணத்தின் பிரீமியர் அமைச்சராயிருந்த இராஜாஜி இந்தியை திணித்த காலமது. அதற்கு எதிராக, , மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதி, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், ஈழத்து அடிகளார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தலைமையில் தீவிர இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் இந்தியை ஆதரித்து நின்ற பெரியார் பிறகுதான் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு வந்தார்.
அக்காலத்தில், சென்னை கடற்கரையில் மிக பிரமாண்டமான இந்தி எதிர்ப்பு மாநாடு (11,9.1938) மறைமலை அடிகளார் தலைமையில் நடந்தது. அதில்தான் “தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற தீர்மானத்தை மறைமலை அடிகளார் அவர்கள் முன்மொழிந்தார். பெரியாரும், நாவலர் சோமசுந்தரபாரதியும் வழிமொழிந்தார்கள்.
ஆனால் பாருங்கள், அடுத்த ஆண்டு 1939-ல் ஒரு அரசியல் விபத்து நடக்கின்றது. ஆந்திர தெலுங்கர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்த ‘நீதிக்கட்சியின் தலைமை’ பெரியார் கைக்கு வந்தது.
உடனே என்ன செய்தார் என்றால், ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை சுருட்டி பரணில் வைத்துவிட்டு “திராவிட நாடு திராவிடர்க்கே” என்ற புது முழக்கத்தை தூக்கிக் கொண்டார்.
இப்படி குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தவர்தான் 1956-ல் மொழிவாரி மாநிலம் பிரிந்த பிறகு வேறு வழியின்றி, “தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை ‘மீண்டும்’ எழுதி ஒட்டிக்கொண்டார். இந்த ‘சந்தர்ப்பவாத’ பெரியாருக்குள்தான் தமிழ்த் தேசியம் இருக்கிறது, தேடுங்கள் என்கிறார்.
பெரியாரின் தீவிர ‘இந்தி எதிர்ப்பு பற்றுக்கு’ மற்றொரு குட்டிக்கரண பல்டியை ஆதராமாக கூறலாம்.
1965-ல் இந்தி திணிப்பு ஆட்சிமொழியாக வருகின்றது. அப்போது காங்கிரஸ் ஆட்சி. பக்தவச்சலம் முதல்வர். திமுக பின்னணியில் மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து தீரத்துடன் ‘தமிழ்மொழி காக்கும் போராட்டம்’ நடத்துகிறார்கள். கிளர்ச்சியாகவும் வெடிக்கின்றது. அதற்கு எதிராக இந்திய ராணுவம் வந்தது. மாணவர் இராசேந்திரன் தொடங்கி 400-க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றார்கள்.
அந்த உணர்ச்சிமிகு போராட்டத்தை பெரியார், ‘காலிகளின் போராட்டம்’ எனறு கூறி அறிக்கை வெளியிட்டார்.
“தமிழ் நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைகார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும், இந்தி கட்டாயம் என்று கட்டிவிட்டது கண்டு, எல்லா மக்களும் சிந்திக்காமல், ‘இந்தி-இந்தி’ என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும், இத்தனை உயிர் சேதமும், உடைமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? பிறகு, முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்.? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” என்றிருந்தது அந்த அறிக்கை. (1965 மே-28.விடுதலை)
அது மட்டுமல்ல, ‘கிளர்ச்சிக்கு தயாராவோம்’ என்று வேறு முழங்கினார்.
என்ன கிளர்ச்சி என்றால், திராவிடர் கழகத்தினர் எல்லாம் கையில் மண்ணெண்ணை, தீப்பெட்டியோடு கிளம்புங்கள். கலவரக்காரர்களை- காலிகளை கண்டால் அந்த இடத்திலேயே அவர்கள் மீது எண்ணெயை ஊற்றிக் கொளுத்துங்கள்’ என்று கொதித்திருந்தார். போராட்டம் நடத்திய தமிழர்களை, தமிழ் அறிஞர்களை கொளுத்துங்கள் என்றார்.
(உண்மையில் அப்படி மண்ணெண்ணையோடு அவர்கள் வீதிக்கு வந்திருந்தால் அன்றோடு அந்த கும்பலின் கதையும் முடிந்து போயிருக்கும். தவறிவிட்டது. காரணம் பெரியாருடையது அப்படி ஒன்றும் பலமான இயக்கமல்ல. அவருடன் இருந்த தம்பிமார்கள் வேறு தனியே பிரிந்து வந்துவிட்டார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களோடு ஒட்டிக்கொண்டு, அதற்கேற்ப சந்தர்ப்பவாத அறிக்கைகளில் அரசியல் நடந்திக் கொண்டிருந்தார் பெரியார்)
அடுத்து, பெரியார் தமிழன் இல்லை என்றால் வேறு யார் இங்கே தமிழன் என்று பொங்குகிறீர்கள்? இதிலாவது உண்மை இருக்கின்றதா? உங்களைப் போன்றவர்கள் எல்லாம் இப்படி சொல்லி அரசியல் செய்வீர்கள் என்றுதானோ என்னவோ, அவரே தன்னை ஒரு கன்னடன் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தன்னை எப்போதும் ஒரு கன்னடன் என்றே கூறி வந்தவர், தமிழில் எந்த சீர்திருத்தவாதியும் இல்லை. எந்த பிராமண எதிர்ப்புவாதியும் இல்லை என்று பேசிவந்தார்..
“ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே! என் தாய்மொழி கன்னடம் என்பதாலேயே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னை தெலுங்கன்-நாயுடு என்றே நினைக்கிறாங்க. ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பித்தது சுயமரியாதை கொள்கைக்குதானே! அதை ஆரம்பித்தது யார்? சர்.பி.டி.செட்டியார்.-தெலுங்கர். டி. எம். நாயர்- மலையாளி. நான்- கன்னடம். தமிழன் யார் இதைச் செய்தான்?” (பெரியார் சிந்தனைகள். வே.ஆணைமுத்து தொகுப்பு. பாகம்-2. பக்கம் 1228. பிப்ரவரி 1973- கலைமகள் பேட்டி)
ஆக, அவரே அவரை கன்னடர் எனக் கூறிவிட்டார். போகட்டும். இந்த பேட்டியிலாவது ஒரு நேர்மை உள்ளதா? என்றால் இல்லை. பெரிய பித்தலாட்டத்தை செய்திருக்கின்றார். அதுதான் வரலாற்று திரிப்பு- புரட்டு என்பது.
நீதிக்கட்சியை தொடங்கிய மூலவர்கள் மூன்று பேர். சர்.பி.டி. தியாகராய செட்டியார்.-தெலுங்கர். நடேச முதலியார்- தமிழர். டி.எம்.நாயர்- மலையாளி. இந்த மூவரில் திட்டமிட்டு தமிழர் நடேசனாரை சொல்ல மறந்துபோனார் பாருங்கள். அதுதான் பெரியாரின் யோக்கியம். தமிழர் நடேசன் முதலியார் பெயரை மறைத்துவிட்டு, அந்த இடத்தில் தன் பெயரை செருகிக்கொண்டார்.
உண்மையில் நீதிக்கட்சி தொடங்கிய நேரத்தில் பெரியார் நீதிக்கட்சிக்குள்ளாகவே இல்லை.
இதில் தியாகராயர் செட்டிக்கும்- டி.எம்.நாயருக்குமே ஆகாது. இருவருமே காங்.கட்சியில் இருந்தாலும் தெலுங்கு-மலையாளியாக ஆகாது. ஒத்துவராது. பெரும் செல்வந்தரான நடேச முதலியார்தான் இருவரையும் இணைத்து பிராமணரல்லாதோர் சங்கமாக, ‘தென்னிந்திய நல உரிமை சங்கத்தை’ தொடங்க காரணமாக இருந்தார். அதுதான் நீதிக்கட்சியின் தொடக்கம்.
1916- நவம்பர் 20-ல் நீதிக்கட்சியின் மாநாட்டை கூட்டுகிறார்கள். அந்த மாநாட்டில் பங்கு கொண்ட முக்கியமான 26 பேரின் பெயர்களை களஞ்சூர் செல்வராஜி வெளியிட்டுள்ளார். அந்த பட்டியலில் ஈ.வெ.இராமசாமி நாய்க்கர் என்ற பெயர் இல்லை. அந்த மாநாடு, சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடந்தது. சர்.பி.டி.தியாகராயர், பி.எம்.நாயர், நடேச முதலியார், ராஜரத்தின முதலியார், கந்தசாமி செட்டியார், முத்தையா முதலியார் போன்ற தமிழர்களும், தேலுங்கர்- மலையாளிகளும் கலந்துகொண்டனர்.
உண்மையில் அந்த காலத்தில் பெரியார் எங்கிருந்திருப்பார்?. காங். கட்சியில்கூட இல்லை. 1919-ல் காங். கட்சியில் அவர் சேர்ந்தார்.
ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்கிற இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, நடேச முதலியார் 1910-லேயே ‘பிராமணர் அல்லாதோர் சங்கத்தை’ நடத்தி வந்தார். (கழஞ்சூர் செல்வராஜி- பிராமணர் அல்லாதோர் கொள்கை அறிக்கை- புத்தகம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு)
தேவநேய பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்டவர்கள் எல்லாம் பாராட்டினார்கள். இருக்கலாம். ஆனால் அவர்களே, தமிழ் காட்டுமிராண்டி மொழி’ என்ற பெரியாரின் அறிக்கைக்கு கடுமையான எதிர் அறிக்கையை வீசியிருந்தார்கள்.
மறைமலை அடிகளாரே பெரியாரை பாராட்டினார் என்ற விஷயத்திற்கு வருவோம்...
1938- இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மறைமலை அடிகளார், தமிழ் அறிஞர்களும் பெரியாரும் சேர்ந்து செயல்பட்டார்கள். அதன் பின்னர் மறைமலை அடிகளார் அவர்களின் கூட்டத்திற்கு சென்று பெரியார் தொண்டர்கள் கலாட்டா செய்தனர். அச் செயலைக் கண்டித்து தமிழ் அறிஞர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
அதன் பிறகு, பெரியார் ‘இனி அடிகளாரின் கூட்டத்தில் நம் தொண்டர்கள் யாரும் கலவரம் செய்யக்கூடாது’ என்று அறிக்கை விடுகின்றார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் வெகுமக்களைத் திரட்டிய பங்கு பெரியார்க்கு உரியது என்ற வகையில் மறைமலை அடிகளார் பெரியாரை பாராட்டியிருக்கின்றார். அதை, ‘பெரியார் பிரச்சாராம் இல்லையேல், மறைமலை அடிகளாரின் நூல்களே விற்றிருக்காது என்ற அளவிற்கு கொச்சைப்படுத்துவது சரியல்ல.
கடைசியாக ஒன்று.‘பெரியார் திருக்குறளை போற்றி தூக்கினார்’ என்கிற வாதத்திற்கு வருவோம்.
1948- காலகட்டம் என்பது பெரியாருக்கும்- அண்ணாவுக்குமான கசப்பு முற்றியிருந்த நேரம். உள்ளுக்குள்ளாகவே கசந்து கொண்டிருந்தார்கள். அண்ணாவின் செல்வாக்கு இளைஞர்களிடையே பெருகியிருந்தது. அதற்கு காரணம், அண்ணா திருவள்ளுவரின் பெருமை, சேர-சோழ- பாண்டியர்களின் வீரம் செறிந்த வரலாறு, படையெடுத்த கம்பீரம், கடல் கடந்து நாடாண்டது என்றெல்லாம் பேசி இளைஞர்களை ஈர்த்ததுதான். இது பெரியாருக்கு ஆகவில்லை.
ஆக, அண்ணா-விற்கு இருந்த அந்த இளைஞர்களின் செல்வாக்கை மடை மாற்றி தன் பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும் என்பதற்காகதான் ஒரே ஒரு முறை மட்டுமே தமிழிசை மாநாடு- திருக்குறள் மாநாடு (1948-ல்) என்று நடத்தினார். சில கூட்டங்களைக் கூட்டினார். அதோடு சரி. பிறகு திருவள்ளுவரை கண்டுகொள்ளாமல் விட்டார்.
இன்னும் சொல்லப் போனால், திருக்குறளை ‘மலத்திற்கு’ ஒப்பிட்டவர்தான் பெரியார். திருக்குறளில் பல நல்ல கருத்துகள் எல்லாம் இருக்கின்றதே என்ற கேள்விக்கு, நல்ல காய்.கறி சாப்பாடுதான் என்றாலும் பக்கத்தில் மலம் வைத்தால் எப்படி இருக்கும்? என்று கூறியவர்தான் பெரியார். இவர்தான் திருக்குறளை காத்தவர் என்றால்...?
இந்தவித தமிழ் வெறுப்புணர்வு, பெரியாருக்கு இறுதிவரை இருந்தது. 1968-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் ஏதோ ஒரு பிரச்சனைக்காக, “தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அமைச்சர் பதவியை தூக்கி எறிவோம்” என்று சும்மா ஒரு சவடால் அடித்தார். அப்படியான நாடக பேச்சைக்கூட பெரியார் சகித்துக் கொள்ளவில்லை.
“எதற்கு பதவியை தூக்கி எறியனும். இதுதான் ஈரோட்டுப் பள்ளியில் கற்ற கல்வியா. நான் நாற்பது வருடமாக கூறி வருகின்றேன். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று” என்ற புகழ்பெற்ற வார்த்தையை கொட்டினார். ஆனால் இவர்தான் தமிழ்த் தேசியவாதி. தமிழ் மொழிப் பற்றாளர்.? பணபலம், படைபலம் இருக்கின்றது என்பதற்காக ‘சந்தர்ப்பவாத’ பேச்சை எல்லாம் தத்துவமாகவும் சித்தாந்தமாகவுத் சித்தரிப்பது ஒரு வரலாற்று திரிப்புதானே?
குறிப்பு- பெரியார் திடலின் பணம் பல்லாயிரம் கோடி இருக்கின்றது. அதை வைத்து அமெரிக்காவில் என்ன? சும்மா ஒரு 800 கோடி கொட்டி சந்திராயனில் பறந்து நிலவில் இறங்கிகூட ‘ தமிழ்த் தேசியமும்- தந்தை பெரியாரும்” என்ற நிகழ்ச்சி நடத்தலாம். பிரச்சனை அதுவல்ல. அது அவர்கள் சுருட்டிய பணம், அவர்கள் நிகழ்ச்சி, அவர்கள் அமெரிக்கா, அவர்களின் நிலா...
ஆனால் இப்போது உள்ள பிள்ளைகள் முன்பு போல் அல்லர். ஆழத்தோண்டி எடுத்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், உடனுக்குடன்...
நன்றி.
பா.ஏகலைவன்
(உதவிய நூல்கள்
1) திராவிடம்: தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா-வழிமறித்ததா? ஐயா.பெ.மணியரசன்.
2) நீதிக்கட்சி: பிரமணர் அல்லாதார் கொள்கை அறிக்கை- கழஞ்சூர் செல்வராஜி.
3) பெரியார் சிந்தனைகள்- பகுதி 2. வே.ஆனைமுத்து
4) நீதிக்கட்சி வரலாறு. திருநாவுக்கரசு.)
அன்பு சகோதரர் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் அவர்களுக்கு.. இப்படி ஒரு விவாதத்தோடு சந்தித்துக்கொள்வோம் என எதிர்பார.....