07/11/2021
எத்தனையோ நாடார் சமுதாய தலைவர்களை அறிந்திருப்போம், தலைவியை அறிந்ததுண்டா??
போஸ்டர்கள் இல்லை, வீண் விளம்பரமோ, மேடை உறுதி மொழிகளோ இல்லை. ஏன் தலைவர் பதவிக்கு கூட போட்டியில்லை.
ஆனாலும் அவரை தலைவி என்பதே பொருந்தர்ச் சொல்லாகும்.
1960 களின் பிற் பகுதிகளில் சென்னையில் நாடார்கள் தொழில் ரீதியாகவும், சங்கங்கள் மூலமாகவும் காலூன்ற பெரிதும் காரணமானவர் ஒரு பெண்மணி என்றால் நம்ப முடியுமா??
ஆம், 1960 ஆம் ஆண்டு வாக்கில் சென்னை க்கு அப்போதைய திருநெல்வேலி மாவட்டம், கருவந்தா கிராமத்தில் இருந்து கணவருடன் புலம் பெயர்ந்தவரே கனியம்மா பாட்டி, சுரண்டையில் பிறந்து, வளர்ந்த காரணத்தால் திருமணமான பின் பனையேறி கணவர் செய்து வந்த கருப்பட்டி காய்ச்சும் தொழிலை சரி வர கணவருடன் சேர்ந்து செய்ய முடியாததனால் சென்னை க்கு புலம் பெயர்ந்தனர்.
அக்காலங்களில் சென்னை க்கு புலம் பெயர்வதென்பது தென் மாவட்ட மக்களுக்கு அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. எந்த ஒரு அறிமுகமும், முன் அனுபவமும் இல்லை என்றாலும் சென்னை வண்ணராப்பேட்டையில் குடியேறி கடுமையான உழைப்பின் மூலம் நிலை பெற்றவுடன் சுற்று வட்டார கிராமங்களை குறிப்பாக சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த எண்ணற்ற சொந்தங்களை சென்னையில் நிலை நிறுத்தி தொழிலில் முன்னேற செய்து பெரும் பங்காற்றினார் கனியம்மா பாட்டி. அப்போதெல்லாம் சென்னைக்கு ரயில் ஏறும் பல குடும்பங்களின் விலாசம் கனியம்மா பாட்டி வீடு தான்.. உண்ண உணவும், இருப்பிடமும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வழங்கி வந்தார் கனியம்மா பாட்டி.
நாடார் சங்கங்கள் அவரவர் சார்ந்த ஊர்களின் பெயர்களில் உருவாக்கம் செய்து நாடார்களிடயே பெரும் ஒற்றுமையை வித்திட்டார். தான் வசித்து வந்த பகுதியில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமலே தனது வீரமிக்க செயல்களாலும், ஆற்றல் மிக்க பேச்சாலும் அனைத்து கட்சி தலைவர்களுக்குமே ஒரு கட்டத்தில் முன் உதாரணமாய் களத்தில் நின்று அனைத்து சமுதாய மக்களுக்கும் பொது பிரச்னைகளை தீர்த்து தனது இயல்பான ஆற்றளால் பெரிதும் போற்றப்பட்டார்.
எண்ணற்ற திருமணங்களை தனது வீட்டில் நடத்தியிருக்கும் பாட்டி, சீமந்தம் கூட செய்ய இயலாத பெண்களுக்கு தன் சொந்த செலவில் தாயாய் நின்று முறைகளை செய்துள்ளார். பெரும்பாலான நாடார் வீட்டு கர்ப்பிணிகளுக்கும் பிரசவம் பார்த்துள்ளார் 1970, 80, 90, 2000 வரை பாட்டி இல்லாத நாடார் வீட்டு திருமணங்களே இல்லை எனலாம். பிறப்பு முதல் இறப்பு வரை எது யார் வீட்டில் நடந்தாலும் கனியம்மா பாட்டியை தான் நாடார் பெருமக்கள் அக்கால கட்டங்களில் நாடினர். நாடார் சமுதாய நலன்களுக்கு நிதி அளிப்பதிலும் முதன்மையாக திகழ்ந்தார்.
பெரும் தொழிலாதிபர்கள் பலர் இன்று பாட்டியின் அரவணைப்பால் உருவாக்கப்பட்டு நம் நாடார் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வண்ணரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவெற்றியூர் பகுதி நாடார்களிடயே தான் வசித்த இந்த சிறு பகுதியில் நாடார்களுக்கும் சரி, பொது மக்களுக்கும் சரி பெரும் தாக்கத்தை எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஏற்படுத்தி இருக்கும் பாட்டியை இந்த தீபாவளியன்று சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆசி பெற்றது பெருமதிப்பு.
தனது 87 ஆவது வயதில் இன்னும் அதே கம்பீரம், அதே அக்கறை, அதே திருநெல்வேலி மொழி வழக்கு என நாடார் சமுதாய க்ரீடத்தில் மிளிரும் முத்தாய் தெரிந்தார் இந்த வீர நாடாத்தி.
இன்றைய தலைமுறை நாடார் சமுதாய தலைவர்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய முதன்மையான பெண்மணி கனியம்மா பாட்டி.
நன்றி
ரா. பார்த்திபன்
திருநெல்வேலி.