14/08/2026
Shelf to Soul Book Reading Challenge
This time, It's an Islamic Historical Novel!
Book: மேற்கு வானம் by ஹசன்
Reviewed by: Suhaina S.F
Don't forget to rate and comment on this review!
Link: https://forms.gle/fp5aF5dWFPa732U39
Review:
அது கி.பி 711-ஆம் ஆண்டு. வட ஆபிரிக்கக் கடற்கரையிலிருந்து கப்பல்கள் புறப்படுகின்றன; அந்தலூஸியாவை அடைகின்றன. பின்னே அலைமோதும் மத்திய தரைக்கடல், முன்னே பரந்து விரிந்திருக்கும் புதிய நிலப்பரப்பு! இருட்டில் உறைந்து போயிருந்த அவ்ஐரோப்பிய நிலப்பரப்புக்கு, அரேபியாவில் உதித்த ஒளிக் கிரணங்களைத் தன் தோளில் சுமந்து செல்கிறான் ஒரு வீரன். அவனது துணிச்சலும் விவேகமும் அந்தப் புதிய தேசத்தின் வரலாற்றை மாற்றி எழுதத் தொடங்குகின்றன.
அந்த வீரர் தான் தாரிக் பின் ஸியாத்.
அவரது வீரமும் உறுதியும்தான் ஐரோப்பாவுக்குள் இஸ்லாத்தைக் கொண்டு சென்றது.
சுமார் 800 ஆண்டுகள் இன்றைய ஸ்பெய்ன் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் செழித்தோங்கியது என்பது பலர் மறந்து போன, சிலர் அறியாது போன கடந்த காலம். அந்த உன்னத வரலாற்றை கற்பனை நயத்துடன் கூடிய சரித்திர நாவலாக செதுக்கியுள்ளார் நாவலாசிரியர் ஹசன்.
ஐரோப்பாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் இடையே மத்திய தரைக்கடலில் நுழையும் வாசல் இன்று 'ஜிப்ரோல்டர்' (Gibraltar) எனப்படுகறது. ஆனால் அதன் உண்மையான பெயர் 'ஜபலுத் தாரிக்'. ஸ்பெய்னில் தரை இறங்கியவுடன் தாரிக்கின் தோழர்கள் கண்ட அந்த முதல் மலைக்கு 'தாரிக்கின் மலை: ஜபலுத் தாரிக்' எனப் பெயரிட்டனர். அதுவே காலப்போக்கில் மருவி 'ஜிப்ரோல்டர்' ஆன கதையை கூறுகிறது இந்நூல்.
அந்தப் பெயரைக் கேட்கும் போதெல்லாம் தாரிக்கின் வீரம் நினைவுக்கு வருவதாக!
ஒரு காலத்தில் முழு ஐரோப்பாவுக்குமே அறிவொளி பரப்பும் விளக்காக ஸ்பெய்ன் திகழ்ந்ததெவ்வாறு? கல்விக்கூடங்கள் அற்ற ஐரோப்பாவிற்கு, அறிவியல் மற்றும் தத்துவத்தின் வாசல்கள் திறந்துவிடப்பட்டது எவ்வாறு? இருண்ட காலத்தில் மூழ்கியிருந்த கண்டத்தை, உலகிற்கே முன்மாதிரி என்று சொல்லும் படியாக அந்தலூஸியாவின் பல்கலைக்கழகங்கள் மாற்றியதெவ்வாறு? இன்றைய நவீன மருத்துவத்திற்கும், வானியலுக்கும் அந்த 800 வருடங்கள் அடித்தளம் இட்டதெவ்வாறு? இதற்கெல்லாம் பதில் அந்த வரலாறு தான். அந்த வரலாற்றை, கதை களம் எதுவோ, அங்கேயே நம்மை அழைத்துச் செல்லும் எழுத்து நடையில் தத்ரூபமாக கண் முன் கொண்டு வருவதோடு மேற்கு வானம் என்ற தலைப்பினூடாகவே, இஸ்லாத்தின் கிரணங்கள் கிழக்கே அரேபியாவில் இருந்து மேற்கே உள்ள ஐரோப்பாவிற்கு நுழைவதை குறியீடாக்கி வியூகம் அமைத்துள்ளார் ஆசிரியர்.
வரலாற்றை கதை வடிவில் கொண்டு சேர்க்கும் போது அது பலரை அடைகிறது. இஸ்லாமிய இலக்கிய பரப்பிலே வரலாற்று கதை வடிவம் குறைவு. அந்த குறைபாட்டுக்கு மத்தியில் இந்த நாவல் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம்.
அதெப்படி? காதல் இல்லாமல் ஒரு நாவலா?
நிச்சயமாக, ஒரு கண்ணியமான காதல் கதையும் இதில் இழையோடும்! தாரிக் பின் ஸியாத்திற்கும், ரேச்சலுக்கும் இடையிலான அந்த மென்மையான உறவு நாவலுக்கு உயிரூட்டுகிறது. இறுதியில் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா? அவர்களின் அந்த ஆத்மார்த்தமான உரையாடலில் தாரிக் தனது பெயருக்குச் சொல்லும் அந்த அர்த்தம் என்ன? தாரிக் சொல்லும் அந்த அர்த்தம் தாரிக் மீது உங்களையும் காதல் கொள்ளச்செய்யும். வாசித்துவிட்டுச் சொல்லுங்கள்!
இப்புத்தகம் கூறும் வரலாறும் அதை கூறும் ஆசிரியரின் லாவகமாக நடையும் அடுத்த வரலாற்று நாவலை தேடச் செய்வன. வரலாறு திரிக்கப்பட்டு, திணிக்கப்படும் இக்காலத்தில், உண்மையான இஸ்லாமிய வரலாற்றைத் தேடிப் பயணிக்கும் வழியில் இப்புத்தகம் ஒரு திசைகாட்டிதான்!
Have an Islamic book that has inspired your thinking? Share your reflections and encourage others to read, reflect, and reconnect with beneficial knowledge.